×

உரங்களை முடக்கிய இலை கட்சி தலைவர்களால் விவசாயிகள் படும் கஷ்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘விவசாயிகளுக்கு என்ன கஷ்டம்…  தமிழகத்தின் நாதன் பெயரை கொண்ட மாவட்டத்தில் உள்ள பிரச்னையை பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாத’ என்று மத்தியில் துவங்கி ‘‘ம்’’ என முடியும் ஏழெழுத்து மாவட்டத்தில் 3.26 லட்சம்  ஏக்கரில் நெல் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிர்களுக்கு தேவையான உரங்கள் 13,390 டன் வரப்பெற்று  வழங்கப்பட்டது. ஆனால் கூட்டுறவு கடன்  சங்கங்களில் தட்டுப்பாடு இருந்ததாக  விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக அரசின் போர்க்கால  நடவடிக்கையால் மாவட்டத்திற்கு சிறப்பு ரயில் மூலம் ஆயிரம் டன் யூரியா வழங்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீண்டும் உரத்தட்டுப்பாடு நிலவுவதாக புகார் எழுந்தது. ‘‘போதிய உரம் வழங்கப்பட்டும் ஏன் தட்டுப்பாடு’’ என விசாரித்தபோது, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாவட்டம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான கூட்டுறவு கடன் சங்கங்களில் ‘‘இலைக்கட்சிக்காரர்களே’’ தலைவராக உள்ளனர். இவர்கள் கடன் சங்க செயலர்களை கைக்குள் வைத்துக்கொண்டு, இரவு நேரங்களில் குடோன்களிலிருந்து  எடுத்து வியாபாரிகள், பெரிய விவசாயிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். அந்தந்த  கூட்டுறவு கடன் சங்கங்களின் எல்லைகளுக்கு உட்பட்ட கிராம விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, விவசாயி  இல்லாதவர்கள், மாற்று முகவரியிலுள்ள ஆதார் அட்டை, போன்றவற்றை ஆதாரமாக வைத்து விற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் சென்னைக்கு புகார்களை தட்டி விட்டு இருக்காங்களாம்..’’ என்றார்   விக்கியானந்தா.‘‘கான்டிராக்டர்களிடம் கரன்சிகளை அள்ளி குவித்து முதலிடத்தில் இருக்கும் பெண்ணை அதிகாரியை பற்றி சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கணக்கு அலுவலராக பணிபுரியும் ஒரு பெண் அதிகாரி, ஆண் அதிகாரிகளைவிட  50  மடங்கு அதிகமாகவே ஆட்டம் போடுகிறார். கரன்சி குவிப்பதில் படு கில்லாடியாக  உள்ளார். கான்டிராக்டர்களிடம் ஆண் அதிகாரிகள் தயங்கி தயங்கி கரன்சி கேட்டால்… இந்த பெண் அதிகாரியோ அதிகார தோரணையோடு கேட்கிறாராம். இவர் தனக்கு மேல்நிலையில் உள்ள உயர் அதிகாரிகளை மதிப்பது இல்லையாம். அவர்கள் சொன்னாலும் உங்க வேலையை நீங்க பாருங்க என்று புறந்தள்ளுகிறாராம். காரணம், கடந்த பதினைந்து வருடமாக ஒரே இடத்தில் ஆணி அடித்த மாதிரி பணியில் இருப்பதுதான் இந்த முறைகேடுகளை தைரியமாக செய்ய காரணமாம். அரசு ஒப்பந்ததாரர்களுக்கும் மற்றும் இதர அலுவலக செலவினங்களுக்கும் காசோலை   வழங்குவது இவரது பணி. இந்த பிடியை தனது கையில் வைத்துக்கொண்டு, மாதம்தோறும்   பல லட்சம் கரன்சிகளை குவிக்கிறார். இவரை பார்த்து ஆண் அதிகாரிகளும் கீழ்நிலை ஊழியர்களும் கப்சிப் என்று இல்லாமல் ெசன்னைக்கு புகாராக தட்டிவிட்டு இருக்காங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தூங்கா நகர ஜெயில் அதிகாரி… மாங்கனி மாவட்ட சிறை அதிகாரிகள் விஷயத்தில் என்ன நடக்குது…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சென்ட்ரல் ஜெயில் எஸ்.பி.க்கள் மூன்றுபேருக்கு திடீரென இடமாறுதல் வழங்கப்பட்டதாம். மறுநாளே டிரான்ஸ்பர் இடத்துக்கு போய் சேந்திடணும் என்று தலைமை அலுவலகத்தில்  இருந்து கடுமையான உத்தரவாம். இதுல ரெண்டு ஆபீசர்ஸ் போட்ட இடத்துக்கு போய்  ரிப்போர்ட் பண்ணிட்டாங்களாம். மாங்கனி சென்ட்ரல் பிரிசனுக்கு மாற்றப்பட்ட அதிகாரி மட்டும் இன்னும் வந்து சேரலையாம். இனி ஒருபோதும் மாங்கனி மாநகர் மண்ணுல என் காலு படாதுன்னு ஜெயிலரா இருந்தப்ப அவர் சபதம் போட்டிருந்தாராம். அதனை நிறைவேற்றும் பணியில் இப்போ இறங்கியிருக்காராம். வழக்கமாக காக்கித்துறையை பொறுத்தவரையில் உத்தரவை உடனே செயல்படுத்திடணும். அதன்பிறகுதான் அதிகாரிகளை சந்தித்து வேறு இடம் கேட்க முடியும். ஆனால் இப்போ  மாற்றப்பட்ட இடத்திற்கு வரமாட்டேன்ன்னு விடாப்பிடியாக இந்த அதிகாரி  இருப்பது சென்னை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செஞ்சிருக்காம். இது ஒருபுறம்  இருக்க, தூங்காநகரத்துல இருந்து மாற்றப்பட்ட அதிகாரியை, பெரிய பிரிசனுக்கு போஸ்டிங் போட்ட விவகாரம்தான் வார்டன்கள் வட்டாரத்துல இப்போது பேசு பொருளாக மாறியிருக்காம்… இது குறித்து சிறைத்துறை ஊழியர்கள் பரபரப்பாக பேசிக்கிறாங்க.. அடுத்து என்ன நடக்கபோகுதோ என்ற திக் திக் மனநிலையில் தான் இருக்காங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ இன்னொரு சிறை துறை மேட்டரை சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்தில உள்ள மத்திய சிறையில் டிஐஜியாக ஜெயமான பணியாற்றி வந்தார்.  இவர் கடந்த 2018ம் ஆண்டு திருச்சியில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, கடந்த ஆண்டு கோவை சரக டிஐஜி பணியிட மாற்றத்திற்காக சென்னையில இருக்கிற அதிகாரிங்கள் அணுகி ‘ப’ வைட்டமின் செலவு செய்ய தயாரா இருந்தாராம். ஆனா அப்போ, ஜெயமானவருக்கு பதிலாக வேறு ஒருவரை பணியிட மாற்றம்  செய்திட்டங்காளாம். இதுல அப்செட் ஆகி இருந்தப்ப தான், ஜெயமானவரின் கணவர் லஞ்ச வழக்கில் சிக்கிக்கொண்டார். அதன்பிறகு வேலூர்ல ஜெயமானவர் தங்கி இருந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடந்தது. இதையடுத்து, அவருக்கு  வேலூரில் பணியாற்ற பிடிக்கவில்லையாம். தொடர்ந்து, பணியிட மாற்றத்திற்கான காய் நகர்த்தி வந்தாராம். கோவை சிறை சரகத்திற்கு பணி மாறுதல் கேட்டு,  முட்டி மோதி பார்த்தும் வேலையாக வில்லையாம். இந்நிலையில, 3 சரக டிஐஜிக்கள்  பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் ஜெயமானவர், எதிர்பார்த்து காத்திருந்த கோவை சரகம் கிடைக்காமல், எங்கிருந்து பணி மாறுதலாகி வந்தோமோ, அங்கேயே பணியிட மாற்றம் செய்துவிட்டார்களே என்று ஏமாற்றத்துடன் சென்றாராம்.  இருந்தாலும் தொடர்ந்து பணியிட மாற்றத்திற்கு முயற்சி செய்து வருவதாக  கூறப்படுகிறது…’’ என்றார் விக்கியானந்தா….

The post உரங்களை முடக்கிய இலை கட்சி தலைவர்களால் விவசாயிகள் படும் கஷ்டத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Nathan ,Tamil Nadu ,Uncle ,Peter ,
× RELATED ஆரம்பத்திலே கண்டறிந்து சிகிச்சை...